சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வந்த நட்சத்திர ஆமையைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவண்ணாமலையில் பணி புரிந்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதை ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு கொண்டுவந்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், நிதின் போன்றோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக செல்போனில் கூறி அதற்குரிய விலையை பேசி பின் பணத்துடன் சிவகாசிக்கு வந்துள்ளனர்.
அப்போது பிரசாந்த் தனது நண்பரான சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அங்கு வந்த கேரள வாலிபர்கள் அருகில் உள்ள மதுக் கடைக்குச் சென்று அவர்களிடம் அங்கு ஒரு பையில் இருந்த நட்சத்திர ஆமையைக் காண்பித்து பணம் பெற முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் 4 வாலிபர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆமையை விற்க வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இரூந்த அந்த ஆமையை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு 4 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.