Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த மூதாட்டி …. உறவினர்கள் திடீர் சாலை மறியல் …. திருவள்ளூர் பரபரப்பு ….!!!

விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின்  பிணத்துடன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது .

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே பொன்பாடி காலனி பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 65) என்பவர் வசித்து வருகிறார். இவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது திருப்பதியிலிருந்து வேகமாக வந்த டெம்போ வேன் ஒன்று அந்த மூதாட்டியின் மீது மோதியது. இதில் மூதாட்டி இந்திராணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் அங்கு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினரை முற்றுகையிட்ட உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்கமால்  உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால்  விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், விபத்தில் உயிரிழந்த மூதாட்டி இந்திராணியின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் பின்னர் விபத்தில் இறந்த இந்திராணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த ஓட்டுநர் தனஞ்செழியனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Categories

Tech |