சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் இரு வழி சாலை மற்றும் நான்கு வழி சாலைகளை மாற்றுவதற்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளை விரிவுபடுத்த வனத்துறையின் அனுமதி தேவைப் படுகின்றன என்பதால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து திட்டங்கள் செயல்பட காலதாமதம் ஆகின்ற நிலையில் அதை தடுக்கும் விதத்தில் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பிரதிநிதிகள் ஒத்துழைத்தால் விரைவாக சாலைகள் அமைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகள் குறித்து காவல்துறையிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே பகுதியில் 5 விபத்துக்களுக்கு மேல் நடந்து இருந்தால் அந்த இடத்தை விபத்து பகுதியாக அறிவித்து விபத்துகளை தடுக்க வேண்டும் எனவும் இதற்காக நெடுஞ்சாலை துறை அலுவலர் வட்டார போக்குவரத்து அலுவலர் காவல் துறையினர் இணைந்து ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. எனவே ரயில்வே இருப்புப் பாதைக்கு மேலாக போடப்படுகின்ற இணைப்பு மேம்பால பணிகள் ரயில்வே துறையினரால் விரைவாக முடிக்காமல் பல பாலங்கள் கட்டப்படாமல் இருந்து வருகின்றது. மேலும் இப்பணியை விரைவாக முடிக்க ஒரு குழுவை அறிவித்து செயல்படுத்த உள்ளோம் என ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.