தேனி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து தாலி, பணம் மற்றும் கோவில் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி-முந்தல் செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலையாளத்து பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக குரங்கணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கோவிலில் உள்ள 4 கிராம் தங்க தாலி, பித்தளை விளக்குகள், ஒலிபெருக்கி கருவிகள் மற்றும் உண்டியலில் இருந்த பணமும் திருடு போயிருந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.