இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், பிரவீனா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கால் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அழிஞ்சல்பட்டு கிராமம் மெயின் ரோட்டை கடக்க முயற்சிக்கும் போது ,அந்த வழியே வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஜங்குசர்மா என்ற நபர் திடீரென்று குறுக்கே வந்தார்.
இதனால் ரஞ்சித் குமாரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் தன் குழந்தையுடன் அவர் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தை பிரவீனா மற்றும் ஜங்குசர்மா ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தூசிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.