ராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் ராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.
பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் – அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். ராவணன் – மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் – தேவாந்தகன் ஆகியோர் ராவணனின் மகன்கள் ஆவார்.
ராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை ராவணனுக்கு தந்தார். ராமாயணத்தில் ராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக ராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராற்றல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.
ராவணனை இன்றளவும் ஆத்மார்த்தமாக வழிபடும் சந்ததியினர் உள்ளனர். தீவிர சிவ பக்தரான ராவணனை அவரது பக்தர்கள் உளமார்ந்து கொண்டாடுகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழர்கள் ராவணனை பெரிதும் விரும்புகின்றனர். ராவணன் புகழை போற்றும் விதமாக அவருக்காக வழிபாடும் நடத்துகின்றனர். அப்படி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் ராவணன் சிலைகள் உள்ளன.
பைஜ்நாத் கோயில்
சிவபெருமானின் ஜோதிர்லிங்க கோயிலான பைஜ்நாத் கோயில் இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் ராவணனுடன் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. ராவணன் இங்கு சிவனை வணங்கினார் என்பது புராணக்கதை.
சிவாலா கோயில்
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள சிவாலாவில் ராவணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்வுகளை நடத்துகிறது. இந்த கோயில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறந்திருக்கும், மேலும் ‘ராவன் பாபா நாமா’ என்ற மந்திரத்தின் கோஷத்தை இக்கோயிலில் கேட்கலாம்.
ராவணன் பிறந்த இடம்
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள பிஸ்ராக், ராவணனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு முதலில் ராவணனின் தந்தை விஸ்ரவாசா பெயரிடப்பட்டது. பின்னர் இது பிஸ்ராக் என்று அறியப்பட்டது. ராவணனும் அவரது தந்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சிவலிங்க பூஜை செய்ததாக புராணக்கதைகள் உள்ளன.
ராவணனின் 35 அடி உயரமான சிலை
ராஜஸ்தான்-மத்தியப் பிரதேச எல்லையில் இந்தூரிலிருந்து 200 கி.மீ தூரத்தில், பத்து தலை, 35 அடி உயரமுள்ள ராவணனின் சிலை மந்தீரில் உள்ளது.