தமிழ்க் கடவுள்’ முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் காட்சி அளிப்பார். ஆனால், இன்று நாம் பார்க்க இருக்கும் கோயிலில் முருகப் பெருமான், வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியவராகத் காட்சி தருகிறார்.
கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்துக்கு வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் நெய்வேலியில் அமைந்திருக்கும் வேலுடையான்பட்டு கோயிலில் இருக்கும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற காட்சி தருகிறார். கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கோயிலில் முருகன், வள்ளி தெய்வானை என மூவரும் ஒரே கல்லில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது.
முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் காட்சி அளித்துள்ளார். தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு முனிவர்களும் தேவர்களும் சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர். காலப் போக்கில் ஆலயம் மண்மூடி மறைந்துவிட்டது. பின் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம்.
ஆனால், அந்த மாடுகள் அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுக்கவில்லை. மன்னருக்கு ஏன் என்று ஒன்றும் விளங்கவில்லை. ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தது. மன்னன் வியப்புற்று, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டியபோது ரத்தம் பெருகி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான்.
அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு கோயில். இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம்தான் கோயிலை நிர்வகித்து வருகிறது. மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலில் கிடைத்தவர். ஆம். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது. இந்தத்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.