தட்டிக் கேட்ட 2 வாலிபர்களை மது பாட்டிலால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமாரபன்னையூர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரி சிவா என்ற மகன் இருக்கின்றார். இவர் ஆத்தூர் பகுதியில் உள்ள பஜாரில் அரிசி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் மாரி சிவா தனது கடையில் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது செல்வம்புதியனூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அரிசி வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் அங்கு சென்று மாரிசிவாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனை சுரேஷ் என்பவர் ஏன் இவ்வாறு திட்டுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மூர்த்தி அங்கு கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து உடைத்து சுரேஷை குத்தியதை பார்த்த மாரி சிவா அவரைத் தடுக்க முயற்சி செய்தபோது அவரையும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் சுரேஷ் மற்றும் மாரி சிவா இருவரும் பலத்த காயமடைந்து மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளனர்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாரி சிவாவின் தந்தையான சுப்பையா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரி சிவா மற்றும் சுரேசை மது பாட்டிலால் குத்தி விட்டு தப்பி சென்ற மூர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.