பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களாக பிரேசில் அதிபரான ஜெயிர் போல்சொனரோ தொடர் விக்கலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிபர் 24 முதல் 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே “கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்பி வருவேன்” என்று அதிபர் ஜெயிர் போல்சொனரோ தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைபடத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஜெயிர் போல்சொனரோவுக்கு 2018-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரான ஆண்டனியோ லூயிஸ் மேசிடோ அதிபரை சாவ் பாவ்லோ மருத்துவமனையில் அடுத்தகட்ட பரிசோதனைகாகவும், அறுவை சிகிச்சைக்காகவும் அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளதாக அதிபர் மாளிகை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிபரின் மகன் பிளேவியோ தனது தந்தை வயிற்றில் இருந்த திரவத்தை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் பேசுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் அறுவை சிகிச்சையானது தீவிரமான முறையில் இருக்கக் கூடாது என்றும் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளார்.