அமெரிக்காவில் பணியாற்ற தேவைப்படும் ஹெச்-1பி விசா கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால், இந்திய மக்கள் பலர் கனடா செல்வதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் கொள்கைக்குரிய தேசிய ஆராய்ச்சி நிறுவனமானது, அமெரிக்காவின் விசா கொள்கைகளில் தவறுகள் இருக்கிறது. எனவே அதிக திறமை கொண்ட இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடா செல்ல தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது. இந் நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 85,000 ஹெச்-1பி விசாக்களுக்காக சுமார் 3.08 லட்சம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டிருக்கிறது.
இதில் 72% விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பாகவே நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மூன்று விதமான விசாக்களில் சுமார் 9.15 லட்சம் இந்திய மக்கள் பணியாற்றி வருகிறார்கள். வரும் 2030ஆம் வருடத்தில் இந்த எண்ணிக்கை 21.95 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2016ஆம் வருடம் வருடத்தைவிட 2018 ஆம் வருடத்தில் நாட்டின் பல்கலைக்கழகங்களில் முதுகலை கணினி பொறியியல் கற்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்த வருடங்களில் கனடா பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்கள் செய்யபட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.