மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 12 சரக்கு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்ரியா திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வெண்கலம் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அலுவலர் பழனிசாமிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் பழனிசாமி விதிகளை மீறிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்து அலுவலர் மற்றும் இருசக்கர வாகன ஆய்வாளரான செல்வகுமார் ஆகியோர் பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி பயணிகளை ஏற்றிச்சென்ற 12 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனங்கள் பயணிகளுடன் இயக்கப்பட்டால் அதனை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.