சட்டவிரோதமாக சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள தனியார் எண்ணெய் ஆலைக்கு பின் புறத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த 11,050 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சூதாடிய ரோசெல் பட்டியைச் சேர்ந்த திராவிடமணி, என்.ஜி.ஓ. காலனி மாரியப்பன், சூலக்கரை சுந்தரம், அல்லம்பட்டி ரமேஷ், சங்கர் ராஜ், மாரிச்செல்வம், கருப்பசாமி, வேல்ராஜ், போலீஸ் பாலத்தை சேர்ந்த சையது ஆகிய 9 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.