கொரோனா ஊரடங்கு காரணமாக நித்யகல்யாணி விலை சரிவு அடைந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கொட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்பிரமணியபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, சிப்பிபாறை, சத்திரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் 4,500 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி பயிராகவும், 500 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் பாசன முறையிலும் நித்தியகல்யாணியை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இது எந்தவிதமான தட்பவெப்ப நிலையிலும் வாடாமல் வளர்ந்து பூத்துக்குலுங்கும் தன்மையில் இருப்பதால் இதற்கு நித்தியகல்யாணி என பெயர் சூட்டப்பட்டது. எனவே எல்லா தட்ப வெப்ப நிலையிலும் வளர்வதால் இதனை விவசாயிகள் விருப்பப்பட்டு சாகுபடி செய்கின்றனர். இந்த நித்திய கல்யாணியில் ஏராளமான மருத்துவ குணங்களான புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க இந்தச் செடியை பயன்படுத்துகின்றனர்.
இந்த செடி பயிரிடப்பட்டு 3 மாதத்தில் பலன் தர கூடியதாக இருக்கின்றது. ஆகவே இந்த செடியின் இலை, பூ, தண்டு முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்திருக்கின்றது. மேலும் இதன் பராமரிப்பு செலவும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதுகுறித்து விவசாயி செந்தாமரை கூறியபோது, வெம்பக்கொட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்தியகல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் செடிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து கொரோனாவிற்கு முன்பு வரை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் நித்தியகல்யாணி செடிகள் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன்பின் விலை குறைந்து, ஏற்றுமதியும் இல்லாததால் விவசாயிகள் கவலையில் இருப்பதாக செந்தாமரை தெரிவித்துள்ளார்.