ஆட்டோ டிரைவர் உயிரிழந்த வழக்கில் போலீஸ் ஏட்டை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்ந்து பேசியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரிடமும் சந்தேகத்தின் பெயரில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சந்தோஷ் என்பவர் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறி அவர்களது செல்போனை பறித்து கொண்டார்.
அதன் பின் விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்ததால் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் பாக்யராஜை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை தொடர்ந்து தவறு செய்யாத நாங்கள் எதற்காக காவல் நிலையம் வர வேண்டும் என கூறிவிட்டு செல்போனை தருமாறு பாக்கியராஜ் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். அதன்பிறகு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பாக்கியராஜ் பீர் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை பிரதீப் அருகில் உள்ளவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாக்யராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏட்டு சந்தோஷிடம் அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு போலீஸ் ஏட்டு சந்தோசை சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.