நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் அலமேலு என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அலமேலு பல்பொருள் அங்காடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்துள்ளார். இதனையடுத்து திடீரென ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலுவிடம் அப்பகுதியில் பெரிய கலவரம் நடப்பதாகவும், உங்களை பத்திரமாக நாங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் ஆட்டோவில் ஏறிய அலமேலுவின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கலவரக்காரர்கள் பறித்து விடுவார்கள் என்று கூறி மர்மநபர்கள் வாங்கிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து அலமேலு தான் ஏமாற்றப்பட்டதை அறிவதற்குள் அந்த மர்ம நபர்கள் அவரை கீழே இறக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து அலமேலு கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.