ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் அவசர தேவைக்கான ரத்தம் இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும் அபாயம் உள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதை குறிப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை இருக்கக் கூடும் என்று கூறினார்.
எனவே இயன்றவரை அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி ரத்ததான தினத்தை முன்னிட்டு அவர் ரத்த தானம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.