தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி போட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தோட்டத்துபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.
இதனையடுத்து கர்ப்பிணிகள் தவிர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் இன்று எங்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கூறியபோது பணியாளர்கள் முறையாக பதில் தெரிவிக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து தடுப்பூசி வந்ததும் முறையாக தகவல் தெரிவித்து பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.