வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் ஹங்கேரி அரசு தனது மக்களுக்கு மூன்றாவது தவணை கொரோனா தடுப்பூசியை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது மக்களுக்கு மூன்றாவது தவணைக்கான கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மூன்றாவது தவணை தடுப்பூசியானது உடல்நிலை மற்றும் வயது ஆகியவற்றைப் பொறுத்து வழங்கப்படும் என்று அவர் வானொலி மூலம் தனது நாட்டு மக்களுடன் உரையாடியபோது கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த மூன்றாவது தவணை தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு போட வேண்டும். இந்த மூன்றாவது தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று கருதுபவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தவறு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஹங்கேரி அரசு சில தடுப்பூசிகள் முழுமையான பலனை கொடுக்கவில்லை என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்ட நிலையில் அது போதிய பலனை அளிக்காததால் மூன்றாவது தவணை தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. முதலில் சினோஃபார்ம் தடுப்பூசியை ஹங்கேரி அரசு தனது மக்களுக்கு அளித்துள்ளது. ஆனால் அந்த தடுப்பூசி போதிய பலனை அளிக்காத காரணத்தினால் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.