ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது பாருக் கண்டியூரில் ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது இளையராஜா உணவு கேட்ட போது முகமது பாருக் இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவருக்குமிடையே தகராறு முற்றவே இளையராஜா இரும்பு தகட்டால் முகமது பாருக்கின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முகமது பாருக் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முகமது பாருக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகமது பாருக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.