நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், அடுத்த 100 – 125 நாட்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால் மட்டுமே மூன்றாவது அலை தாக்குதலை தடுக்க முடியும். அடுத்த நான்கு மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் சரியான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.