ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலினால் உயிரிழந்த புகைப்பட செய்தியாளர் குடும்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் குறித்து செய்தி சேகரிக்க ராய்ஸ்டர் நிறுவனத்தின் புகைப்படப் செய்தியாளர் டேனிஷ் சித்திக் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கந்தகாரின் அருகில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் தாலிபான்களுக்கும் இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் டேனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திற்கு இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் பரித் மமுந்த்சாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துரைக்கிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஊடகங்களும் தொடர்ந்து தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. மேலும் மறைந்த புகைப்பட செய்தியாளர் சித்திக்கின் குடும்பத்திற்கு நாங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படும் என ஐ.நா கூறியுள்ளது. இவர் 2018 ல் ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புல்லிட்சர் விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கதாகும்.