சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தஞ்சாவூருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மேலவஸ்தாசாவடி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 20 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சூரியகுமார், பிரபு, அருண்குமார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் தனிப்படை காவல்துறையினர் புகையிலை கடத்தி வந்த மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலைப் பொருட்கள், சரக்கு ஆட்டோ, ஸ்கூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.