நாமக்கல் மாவட்டத்தில் தச்சுதொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பட்ட பகலில் 8 1/2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் உள்ள ஜீவானந்தம் தெருவில் தச்சுத் தொழில் செய்து வரும் தண்டபாணி அவரது மனைவி பரிமளம்(48) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தண்டபாணி கடந்த 14ஆம் தேதி வேலைக்காக நாமக்கல்லில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று பரிமளமும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சிலர் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பி வந்த பரிமளம் பூட்டு உடைந்து இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.