நூதன முறையில் தாய், மகள் இருவரும் இணைந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதனையடுத்து கடையில் உள்ள பலவகையான நகைகளை பார்த்துவிட்டு எதுவும் எடுக்காமல் அங்கிருந்து இரண்டு பெண்களும் சென்று விட்டனர்.
இதனை தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை சோதனை செய்த போது அதில் ஒரு கம்மல், செயின் மற்றும் மோதிரங்கள் போன்றவை கவரிங்காக இருப்பதை கண்டு ராம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் ராமுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல நடித்து இரண்டு பெண்கள் கவரிங் நகைகளை மாற்றி வைத்து விட்டு திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ராம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பெண்களும் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி மற்றும் அவரது தாயார் சுமதி என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக தாய், மகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.