அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நிறைமாத கர்ப்பிணி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குண்ணமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் குன்ன மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் மட்டும் முதல் உதவி செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவருக்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்தது. இதனால் வலியில் அலறவே அவரின் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அவரை வார்டுக்கு அழைத்து வந்தனர்.
பிறகு அந்த பெண்ணிற்கு உடல் நலம் மிகவும் மோசமானதால் உறவினர்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததாவது அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அவருக்கு கழிவறையில் குழந்தை பிறந்தது என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.