தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அது குறித்த முன்னறிவிப்பு இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கோவிஷில்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஆன்லைன் பதிவுக்கு 70, நேரடியாக வருவோருக்கு 130 என ஒரு மையத்திற்கு 200 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.