கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் பணம் பற்றாக்குறை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் வேறு படிப்பை படிக்க நேரிடலாம். கல்வி கடன் பெற முன்புபோல் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi Portal உள்ளது. அதில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஏதாவது 3 வங்கிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும் கல்விக் கடன் பெறுவதை பாதிக்காது. மேலும் UGCன் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. ஏழரை லட்சத்திற்குள் கடன் பெறுபவர்களுக்கு அடமானம் ஏதும் தேவையில்லை. அதற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு மட்டும் அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை அடமானமாக கொடுக்க வேண்டும். ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற பெற்றோர்களின் கையொப்பம் மட்டுமே போதுமானது. ஆவணம் அல்லது மூன்றாம் நபரின் கையெழுத்து சமர்ப்பித்தால் வட்டி மானியம் கிடையாது.
நிர்வாகம் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களு்கும் கடன் உதவி கிடைக்கும் ஆனால் வட்டி மாணியம் கிடைக்காது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை 15 ஆண்டுகள் வரை தவணை முறையில் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது. கல்லூரி விடுதி, ஆய்வுக்கூடம் வெளிநாட்டுக்கான பயணச்செலவு, உபகரணங்கள், சீருடை, மடிகணிடி ஆகியவற்றுக்கு தேவையான செலவையும் கூட சேர்த்து கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக்கடன் பெற பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிட மற்றும் வருமான வரி சான்று ஆகியவை கட்டாயம். உயர்கல்வியில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்கள், இவற்றை முன்கூட்டியே முறையாக விண்ணப்பித்து பெற்று வைத்து கொள்வது நல்லது. கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும். 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வங்கி மாணவருக்கு கடன் அளிப்பது அல்லது நிராகரிப்புக்கு தகுந்த பதிலை சொல்ல வேண்டும். உரிய பதில் ஏதும் கிடைக்காத பட்சத்தில் மத்திய அரசின் இணைய தளமான pgporatl.gov.in என்ற இணையதளத்தில் புகார் கொடுத்தால் பதில் கிடைக்கும்.