மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கொங்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம், குப்பாயி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பனுக்கும் ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ரோகித், யஸ்வந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ரேவதி கொங்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரேவதி நடத்தை மீது கருப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவன் மனைவியிடையே வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் மிகவும் ஆத்திரம் அடைந்த கருப்பன் ரேவதியின் கழுத்தை துண்டு வேட்டியால் இறுக்கி கொலை செய்தார்.
அதன்பின் கருப்பன் உடனே ரேவதியின் அண்ணனாகிய சோமசுந்தரம் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “உன் தங்கையின் நடத்தை சரியில்லை. எனவே அவளைக் கொன்று விட்டேன்” என கூறியுள்ளார். அதன்பின் கருப்பன் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகம், குப்பாயி ஆகிய 2 பேரும் தனது மகள் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது ரேவதி பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குப்பாயி ஆகிய இருவரும் கதறி அழுதனர். இதுகுறித்து ஆறுமுகம் சித்தோடு காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரேவதியின் சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கருப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.