ரயில் நிலையத்திற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து கோவை ரயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும், ரயில்வே காவல்துறையினரும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கு எந்த வெடி குண்டும் சிக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் துடியலூர் பகுதியில் வசிக்கும் காவலாளியான செந்தில்குமார் என்பவர் தான் கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் காவலாளியை கைது செய்து நடத்திய விசாரணையில் கடந்த மாதம் இவரின் மனைவி கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.