வார மாட்டுச்சந்தையில் 1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சனிக்கிழமைகளில் வார மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாட்டுச்சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் மாடுகளை அதிகளவில் விலைக்கு வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வியாபாரிகள் பெரியபேட்டை பகுதியிலுள்ள பாலாற்று படுகையில் அரசு உத்தரவை மீறி அமைக்கப்பட்ட தற்காலிக மாட்டு சந்தையில் இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் மாடுகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
அதன்பின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர். திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம், வீரணமலை, ராமகுப்பம் போன்ற பகுதிகளில் இருந்தும், 1,500-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு ஒரு மாட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர்ந்து இந்தப் பகுதியில் மாடுகளை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மாடு வியாபாரிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கி கொரோனா பரவாமல் தடுக்க வாணியம்பாடி நகராட்சி, வருவாய், காவல்துறை, சுகாதாரத்துறையினர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.