காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி ,சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்கப்படும் 22 பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் பணிமனை வாயில் அருகே திரண்டு ஊழியர்கள் பிஎஸ்சிசி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த கோரியும் மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதற்கு தேதி நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பிஆர்டிசி ஊழியர்கள் ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.