சிகிச்சை அளிக்கப்பட்ட யானை ரேடியோ காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்து விட்டனர். அதன்பின் ரிவால்டோ யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அதற்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வனத்துறையினர் சீராக பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவு ஆணை முதுமலை புலிகள் காப்பக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விட முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும் போது கூண்டிலிருந்து யானையை விடுவித்து அபயரண்யம் வனப்பகுதியில் விட திட்டமிட்டுள்ளோம். மேலும் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அதனை கண்காணித்த பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.