பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக முதியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி இறச்சகுளத்தில் மருதப்பன்- சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு திடீரென தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் மூடியை கழற்றி கொண்டிருந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் சரஸ்வதி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சரஸ்வதியிடம் நடத்திய விசாரணையில், எனக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் 2-வது மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் 2-வது மகனின் பிள்ளைகள் நாங்கள் வசிக்கும் வீட்டை கேட்டு தகராறு செய்ததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது பேரப்பிள்ளைகள் எங்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்து என் மீது மண்ணெண்ணெய் ஊற்றினர்.
எனவே எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று சரஸ்வதி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் மருதப்பன்- சரஸ்வதி ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் உடமைகளை காவல்துறையினர் பரிசோதனை செய்த பின்புதான் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்குவர். ஆனால் மருதப்பன்-சரஸ்வதி தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினருக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டு வந்துள்ளனர்.