மலைக்கோட்டைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல நேர கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது. அந்த மலைக்கோட்டையில் வரதராஜ பெருமாள், கோட்டை மாரியம்மன், முனியப்பன் , தர்கா மற்றும் சென்னகேசவ பெருமாள் போன்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டையானது தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அந்த மலைக்கோட்டைக்கு செல்லும் நுழைவு பகுதியில் எந்த ஒரு கேட்டும் போடாமல் இருந்துள்ளது.
எனவே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் தடையின்றி சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த மலைக்கு செல்லும் நுழைவு பகுதியில் கேட் ஒன்று அமைத்து அங்கு செல்வதற்கான நேர கட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர். அந்த மலைக்கோட்டைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.