முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி தாலுகாவில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதிலும் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது. இதனையடுத்து தோப்பூர், சத்திரம்புளியங்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், சித்துமூன்றடைப்பு, கிழவனேரி, பார்ப்பணம், நாங்கூர், கல்லுப்பட்டி, மந்திரிஓடை, மறைக்குளம், தேனூர் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு காரியாபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு காரியாபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து அதிக கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி வருவதனால் அனைத்து பகுதிகளுக்கும் ஒழுங்காக மின்சாரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று மாணவர்களும் கல்வி படிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து 2018-ஆம் ஆண்டு முடுக்கன்குளம் சந்தை அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் வாங்கப்பட்டது. இவ்வாறு மின்வாரியத்தில் இருந்து முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்தப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே முடுக்கன்குளம் பகுதி விவசாயிகளின் மின் தட்டுப்பாட்டை போக்க துணைமின் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.