மது போதையில் காலில் விழுந்த தலைமையாசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சாதி ரீதியில் கல்வி அதிகாரிகள் செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த போராட்டத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரான புவியரசு என்பவர் கலந்துகொண்டார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் புவியரசன் குடிபோதையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் நிகழ்ச்சியில் தலைமையாசிரியரான புவியரசன் உரை ஆற்றிக் கொண்டிருந்த சங்க நிர்வாகத்தினரின் காலில் திடீரென விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதன்மை கல்வி அதிகாரி, அரக்கோணம் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷுக்கு இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி கல்வி மாவட்ட அதிகாரி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதன்மை கல்வி அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினார். அதன்பின் முதன்மை கல்விஅதிகாரி காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரான புவியரசனை மது போதையில் காலில் விழுந்த குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.