ஆற்றங்கரையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மண்டகொளத்தூர் பேட்டைதோப்பு பகுதியில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஜூலை 15 – ஆம் தேதியன்று முரளி தனது நண்பரான சீனு என்பவருடன் வெளியில் சென்றுள்ளார். இதனை அடுத்து மணல் கடத்தியதாக முரளியிடமிருந்த மாட்டு வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் காவல்துறையினரிடமிருந்து தப்பி சென்ற முரளி தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நிலையில் முரளியின் அண்ணன் மகனான முருகன் என்பவர் சித்தியான தீபாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அப்போதுபாலச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் ஓரம் அமைந்துள்ள ஆற்றங்கரையில் மர்மமான முறையில் சித்தப்பாவான முரளி உயிரிழந்து கிடப்பதாக தீபாவிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தீபா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து முரளியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கூறும் போது காவல்துறையினர் மணல் கடத்திய சம்பவத்திற்காக முரளியை துரத்தி சென்று அடித்து கொலை செய்துள்ளனர் எனவும், சடலத்தை எடுக்க மாட்டோம் என காவல் நிலையத்தின் முன்பு தீடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து முரளியின் பிரேத பரிசோதனை முடிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அதாவது காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடிய போது எலிகளை அழிப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி முரளி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.