அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் மதுரையிலிருந்து தேவக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ராம் நகர் பகுதிக்கு பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பேருந்தின் கண்ணாடி நோக்கி கல்லை வீசி தாக்கியுள்ளார்கள்.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பாலமுருகனின் கண்ணில் குத்தியுள்ளது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பாலமுருகன் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் பேருந்து மீது கல் வீசி தாக்கிய மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.