பெண்கள் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் தேங்காயை நெருப்பில் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் தேங்காய்களை சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்தி ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனர். இந்நிலையில் பெண்கள் தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டனர். இதனையடுத்து பெண்கள் தேங்காயின் கண் பகுதியை உடைத்து அதில் நிலக்கடலை, பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பச்சைபயிறு உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்தனர். மேலும் அந்த தேங்காயை ஒரு நீளமான குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டனர். அதன்பின் சுட்ட தேங்காயை விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று பெண்கள் வழிபட்டனர்.
இதனையடுத்து அந்த தேங்காயை பெண்கள் தங்களது உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டனர். மேலும் இதுகுறித்து குமலன்குட்டை பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறும்போது ஆடி மாத பிறப்பை வரவேற்கும் வகையில் தேங்காயை சுற்றி விநாயகருக்கு படைப்பதன் மூலம் குடும்ப நலன் பெற்று செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை என கூறியுள்ளனர். மேலும் தேங்காயில் நிலக்கடலை, பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை பெறும் என கூறியுள்ளனர்.