தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துத்திபட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் பிரச்சனையால் வாசுதேவன் குடும்பத்தினருக்கும், அவரது நண்பரான சுகுமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கண்ணனை சுகுமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கமாக கண்ணன் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அதே பகுதியில் வசித்த ஆறுமுகம் என்ற தொழிலாளி தூங்கி கொண்டிருந்தார்.
ஆனால் அதனை அறியாத சுகுமார் கண்ணன் என நினைத்து தடியால் ஆறுமுகத்தின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சுகுமாரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்பின் வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுகுமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.