விற்பனைக்காக வைக்கப்பட்ட சுமார் 200 கிலோ கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன மீன் மற்றும் பழைய இறைச்சிகளை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாயனம் கலந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.