புதிதாக உருவாகி இருக்கின்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவதால் இளைஞர்கள் குளித்து மகிழ்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதிகளில் பெய்த கனமழையினால் திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இந்த வெள்ளமானது வாணியம்பாடியை கடந்து ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து வாணியம்பாடியை அடுத்த சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில், கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தேவராஜபுரம், வெங்கட் ராஜபுரம் இடையே திம்மகெடா நீர்வீழ்ச்சி, பாறை மடுவு நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி இருக்கின்றது.
இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்காக வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திருப்பத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் திரண்டு வருகின்றனர். ஆனால் ஆந்திர மாநில வனத்துறையினர், காவல்துறையினர் ஒரு பகுதியில் கண்காணித்து தமிழக பகுதிகளில் இருந்து வருபவரை தடுத்து நிறுத்துகின்றனர். மேலும் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள அலசந்தாபுரம், நாராயணபுரம் பகுதியில் தமிழக காவல்துறையினரும் இளைஞர்கள், பொதுமக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் வனப்பகுதி என்பதால் பொதுமக்கள் வேறு வழியாக புகுந்து அருவி பகுதிக்கு செல்கின்றனர்.