தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 போட்டி கடந்த 2016- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2 தடவையும் , தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக டிஎன்பிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது .இந்நிலையில் 5-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி இன்று முதல் சென்னை சேப்பாக்கம் ஏ.எம் .சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 5-வது சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தற்போது சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் நுழைகின்றது. இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதையடுத்து ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும். மேலும் லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களுக்கு முன்னேறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னதாக’ ப்ளே- ஆப் ‘சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் தொடரில் கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றது . இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.