வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளராக ரஞ்சித்குமார் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி நேதாஜி நகரில் உள்ள ரஞ்சித்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த 35 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய், 10 சொத்து ஆவணங்கள் வருமானத்திற்கு அதிகமாக இருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். அதன்பின் ரஞ்சித்குமார் மற்றும் அவரின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பின் சொத்து ஆவணங்களை கைப்பற்றி குடும்பத்தினர் வருமானம் மற்றும் அனைத்து வரவு, செலவுகள் கணக்குக்கெடுக்கப்பட்டது. அதில் ரஞ்சித்குமார் வருமானத்திற்கு அதிகமாக 93 லட்சத்து 18 ஆயிரத்து 92 ரூபாய்க்கு சொத்து சேர்த்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது அவரது வருமானத்தை விட 272 சதவீதம் கூடுதலாக இருக்கின்றது. இதனைதொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரஞ்சித்குமார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.