காரியாபட்டியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. நகர், எழில் நகர், ஆசிரியர் காலனி போன்ற பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த பகுதியில் அதிக திறன் கொண்ட மின் மாற்றிகள் இல்லாததால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றபடி மின் விநியோகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டதால் இந்தப் பகுதியின் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து பாண்டியன் நகர், என்.ஜிஓ. நகர் பகுதிகளில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த மின் தடையை போக்குவதற்கு இந்த பகுதியில் கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சார வாரிய அதிகாரிகளை அழைத்து காரியாபட்டி பாண்டியன் நகர் பகுதிகளில் கூடுதல் மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காரியாபட்டி, கள்ளிக்குடி சாலையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது .
இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி மின் பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செந்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன், குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.