Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அரைவட்ட புறவழிச்சாலை பணி” அதிகரிக்கும் போக்குவரத்துக்கு நெரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற ஆன்மிக தலங்களுக்கு போகும் தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் வழியாக செல்கின்றது. இதனால் தினமும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து பெரும்பாலான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திருவாரூர் நகர் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கின்றது. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான கனரக வாகனங்களில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா போகும் வாகனம் என்று நாள்தோறும் திருவாரூர் பகுதி வழியாக பெரும்பாலான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக விபத்து நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரைவட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2008-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. எனவே இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதப்படுத்தப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பல காரணங்களால் அரைவட்ட புறவழிச்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் திருவாரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலினால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்தப் பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளதால் திருவாரூர் அரைவட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை மீண்டும் தொடங்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |