ராமநாதபுரம் மாவட்டத்தில் தகராறு காரணமாக மர வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்துள்ள பொட்டகவயல் பகுதியில் கர்ணன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருவேல மரங்களில் இருந்து விறகு எடுத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(43) அதே தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு அர்ச்சுனன் கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அர்ச்சுனன் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த கர்ணனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கர்ணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கர்ணன் உயிரிழந்துள்ளார். மேலும் கொலை செய்த அர்ச்சுனனை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் போலீசார் அர்ச்சுனனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.