ஆடிட்டிங் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரம்பை கிராமத்தில் ஆடிட்டரான சக்திதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஆடிட்டிங் அலுவலகம் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் அலுவலகத்தை பூட்டி விட்டு சக்திதாசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது அதன் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சக்திதாசன் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அலுவலகத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அலுவலகத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.