ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் திரும்பி அழைக்கவுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரான நஜிப் அலிகேலின் மகள் 27 வயதான சில்சிலா அலிகேல் ஆவார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடத்திய கும்பலிடம் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் இருக்கும் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும் ஆப்கானிஸ்தான் திரும்பி அழைக்கவுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் தூதர், அவர்களின் குடும்பத்தார் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு போன்றவை பாகிஸ்தானில் பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இவர்களை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திரும்பி அழைப்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும் ஆகவே ஆப்கானிஸ்தான் அரசு தனது முடிவை மாற்றி அமைக்க முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.