மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து செயலாளர் வீரபெருமாள் தலைமையில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் செயலாளர் ராஜா, கிளை உறுப்பினர் பாலமுருகன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து பாடை கட்டி அதில் மோட்டார் சைக்கிளை வைத்துக் கொண்டு அதற்கு பூதூவியும் சுமந்து முக்கிய சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் உயர்வால் இருசக்கர வாகனங்களின் நிலை இதுதான் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே சென்றுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.